(கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரிய சக்தியை பயன்படுத்தி விவசாயம் செய்வது பற்றி ஒரு காணெளியை எமது யூரிப் இல் இட்டு அதனை சில நாட்களுக்கு முன்பு எமது தளம் மற்றும் முகநூலில் பகிர்ந்து இருந்தோம்.அதனை பார்வையிட்ட பலர் சோலர் சம்பந்தமாக விவாதித்து இருந்தனர்.அது பற்றிய தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. திணைக்களம் சார்பாக முரண்பாடான கருத்தை பரப்புவது நோக்கமல்ல)
சோலர் பனல்கள்
தொடர்ச்சியாக மின்சாரத்தைப்பெற்றுக் கொள்வதில் பல சிக்கல்தன்மை உலகளவில் காணப்படுகிறது.நீர் மின்சாரம் அனல் மின்சாரம் அணு மின்சாரம் என பல வகைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும் இவற்றிலுள்ள பல பின்விளைவுகள் பல ஆபத்தை விளைவிக்கின்றமையாக இருக்கின்றது இதற்கு மாற்றாக விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்படுவது சூரிய சக்தியிலான மின்சாரமாகும்.சூரிய சக்தியை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான எளிய பொறிமுறை சாதனம் தான் சோலர் பனல்கள்.
சூரிய சக்தியுடனான விவசாயத்தை ஊக்குவித்தல் செயற்றிட்டம்
சோலர் பனல்கள் பாதுகாப்பானது மற்றும் விவசாயிகளது நீர் இறைப்புத்தேவை சிறியளவு மின்சாரப்பயன் பாட்டிற்கு உதவக்கூடியது.தவிர மின்சார வசதிகளை இணைப்பதற்கு பெரும் செலவும் சில இடங்களுக்கு மின்சார வசதியை இணைக்க முடியாத சந்தர்ப்பங்களில் சூரிய சக்தி மூலமான மின்சாரம் கை கொடுக்கும்.
விவசாயத்திணைக்களத்தினது சூரிய சக்தியுடனான விவசாயத்தை ஊக்குவித்தல் செயற்றிட்டம் வடமாகாண நிதிக்குட்டபட்ட பணத்தில் விவசாயிகளது அரைவாசி பங்களிப்புடன் 2017 மற்றும் 2018 களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் பெறுமதி 4 இலட்சமும் விவசாயிகளது பங்களிப்பு இரண்டு இலட்சமும் ஆகும்.
பிற தொழில் செய்கின்ற மற்றும் வேறு நிதி மூலங்களில் வாழும் மக்களுக்கு இரண்டு இலட்சம் பெரிய நிதியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் விவசாயத்தை மாத்திரம் நம்பி வாழும் மக்களுக்கு இது பெரிய முதலீடே ஆகும்
சீனா மற்றும் தென்னிலங்கை கம்பனிகள்
இதற்கான சகல பாகங்களும் பொருட்களும் சீனாவை மையமாக கொண்டு இயங்கும் கம்பனியின் இணை பங்காளர்களாக இருக்கும் தென் இலங்கை தனியார் கம்பனியிடமிருந்து பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.இச்செயற்றிட்டத்திற்கான விலைமணு கோரலில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த உள்ளுர் கம்பனிகளும் விண்ணப்பித்து அவை நிராகரிக்கப்பட்டே தென்னிலங்கை கம்பனிகளுக்கு இந்த செயற்றிட்டம் வழங்கப்பட்டிருந்தது.
சோலர் தொகுதிக்கான உத்தரவாதம் மற்றும் சோலர் தொகுதிகளது செயலிழப்பு
வழங்கப்பட்ட சூரிய சக்தி பனல்களில் ஒவ்வொரு பாகத்திற்கும் (solar array, charge controller, inverter) பல வருடங்கள் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் வழங்கப்பட்டு சில வருடங்களுக்கு உள்ளாகவே பல சோலர் தொகுதிகள் வினைதிறனற்று செயலிழந்து வேலைசெய்யாமல் போய் உள்ளது.
உத்தரவாதம் அளிக்கப்பட்ட பொருள் இவ்வாறு உத்தரவாதமளிக்கப்பட்ட பொருளில் பிரச்சனை என்றால் அதனை தீர்த்து வைக்க வேண்டியது விவசாயிகளுக்கு குறித்த பொருளை அறிமுகம் செய்த விவசாயத் திணைக்களமே ஆகும்.விவசாயிகள் தனியார் கம்பனியை நம்பி சோலர் தொகுதியை வாங்கவில்லை விவசாயத்திணைக்களத்தினை நம்பியே வாங்கினார்கள்.
வடமாகாகணத்தில் உள்ள 5 மாவட்டங்களில் நூறுக்கு மேற்பட்ட தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.இவற்றில் 70 சதவீதமான தொகுதிகள் செயலிழந்து விட்டன. சிலது வினைதிறனற்றுக் காணப்படுகிறது.பத்துக்குட்பட்ட தொகுதிகள் மாத்திரம் செயற்படுகிறது.இதுவும் inverter இல் ஏற்பட்ட பிரச்சனைகளை விவசாயிகளே தற்துணிவில் மாற்றி உள்ளனர்.solar array, charge controller இல் ஏற்படும் பிரச்சனையை குறித்த கம்பெனியே தீர்க்க வேண்டும்
விவசாயத் திணைக்களம் என்ன சொல்கிறது
விவசாயத் திணைக்கள களநிலை உத்தியோகத்தர்களிடம் விவசாயிகள் தொடர்ச்சியாக முறைப்பாட செய்த வண்ணம் உள்ளனர்.விவசாயிகளுக்கு கிடைக்கும் பதில்கள் வருமாறு
1.கடிதம் மூலமான முறைப்பாட்டினைத்தாருங்கள்
2.கடிதம் மாகாகண திணைக்களத்திற்கு அணுப்ப பட்டுள்ளது
3.மாகாண திணைக்களத்திடமிருந்து பதில் இல்லை
4.சற்று பொருத்து கொள்ளுங்கள்
5.குறித்த கம்பெனியை தொடர்பு கொள்ள முடியவில்லை
6.கொவிட் நிலைமை காரணமாக சீனாவிலிருந்து உதிரிப்பாகங்கள் வரவில்லை
சோலர் பனல்கள் இயங்காமை குறித்து விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்
- விவசாயத்திணைக்களம் சார்பாக கிடைக்கும் பதில்களில் விவசாயிகளுக்கு திருப்தி இல்லை.
- சில விவசாயிகளுக்கு வழங்கிய பனல்களுக்கும் பொருட்களுக்கும் தமக்கு வழங்கிய பொருட்ககுக்கும் பனல்களுக்கும் வேறுபாடு உண்ட என்கிறார்கள்
- தண்ணீர் இறைக்கும் பம் மாதிரியான பொருளாக இருந்தால் விவசாயிகள் திருத்தி இருப்பார்கள் ஆனால் சோலர்பனல் பொறிமுறை தண்ணீர் இறைக்கும் பம்மினது பொறிமுறையை ஒத்தது அல்ல.
- களநிலை உத்தியோகத்தர்களுக்கும் சோலர் பனல் இயங்கு பொறிமுறை தெரியாது
- மேலதீக செலவு செய்தாவது சோலர் தொகுதியை இயக்கி தர விவசாயத்திணைக்களம் முன்வர வேண்டும் மேலதீக பணத்தை விவசாயிகள் பொறுப்பேற்பார்கள் சோலர்பனல் இயங்கினால் போதும்
- ஆரம்பத்தில் சோலர் பனல்கள் இயங்கி பின் இயங்காமல் போன காலத்தில் பெரும் விவசாய இழப்பினையும் திணைக்களம் சார்பாக மன உழைச்சலையும் எதிர் கொண்டிருந்தோம் என்கிறார்கள்
எதிர்காலத்தில் சோலர் பனல் சார்ந்த திட்டம் விவசாயத் திணைக்களத்திடமிருந்து கிடைக்குமா அதனை விவசாயிகள் ஏற்றுக் கொள்வார்களா
விவசாயிகள் திணைக்களம் சார்பாக முழுமையாக நம்பிக்கை இழந்த விடவில்லை.ஆனால் தற்போது செயற்படாமல் இருக்கும் அத்தனை தொகுதிகளும் விரைவிலட செயற்படுத்தப்பட திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடு தன்மை எல்லாம் மிகச்சரியானது ஆனால் சோலர் பனல் தொழிற்படாமல் இருப்பதே பிரச்சனை
விவசாயிகளுக்கு உதவுவோம்
விவசாயிகள் முழுமையாக விவசாயத் திணைக்களத்தினை சார்ந்து இருக்கவில்லை.சோலர் பனல்களை திருத்தக்கூடிய கம்பனிகள்,தனி நபர்களை விவசாயிகள் பலரிடமும் விசாரித்து வருகிறார்.
இந்த பதிவை வாசிக்கும் உங்களுக்கு சோலர் பனல்களை திருத்தக்கூடிய தெரிந்து யாரும் இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.நாம் விவசாயிகளது தொடர்புகளை நேரடியாக உங்களுக்கு வழங்குகிறோம்.
விவசாயிகளது சோலர் தொடர்பான பிரச்சனையை தீர்க்க கூடியவர்களுக்கு இந்த பதிவை பகிரவும்
சூரிய சக்தியை பயன்படுத்தி விவசாயம் செய்வது பற்றி நாம் பகிர்ந்த காணொளி