2022-2023 மகா பருவத்தில் உர விநியோகத்தில் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பல்வேறு மோசடிகள் மற்றும் முறைகேடுகளை செய்ததாகக் கூறப்படும் சுமார் 50 விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களின் சேவையை இடைநிறுத்தவும், கிட்டத்தட்ட 300 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தவும் விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
மகா பருவத்தில் உர விநியோகத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக புதன்கிழமை (18) நடைபெற்ற கூட்டத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் மேற்படி விடயம் தொடர்பான விபரங்களை முன்வைத்தது. விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம் தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் அதிகாரிகள் தொடர்பில், சில அதிகாரிகள் பணம் பெற்று நெல் பயிரிடாத விவசாயிகளுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளதாகவும், சில அதிகாரிகள் போலியாக வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அமரவீரவிடம் தெரிவித்துள்ளது.
இவ்விடயங்களை கருத்திற்கொண்டு, உர விநியோகம் தொடர்பான மோசடிகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுமார் 50 அதிகாரிகளின் சேவையை இடைநிறுத்துமாறும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். எரிபொருள் விநியோகம் தொடர்பான மோசடிகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 300 அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கடந்த யால மற்றும் மஹா பருவங்களில், இரசாயன மற்றும் கரிம உரங்கள் உட்பட பல வகையான உரங்களை அமைச்சு விவசாயிகளுக்கு விநியோகித்தது. மேலும், நெல் பயிரிடுவதற்கும் அறுவடை செய்வதற்கும் தேவையான எரிபொருளுக்கு, குறிப்பாக டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியதால் விவசாயிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான லீற்றர்களை கொள்வனவு செய்யக்கூடிய உரிமங்களை வழங்கும் திட்டத்தையும் அமைச்சு ஆரம்பித்துள்ளது.
Sinhala – புத்திக சமரவீர
தமிழ் – ரஜிதன் மகேஸ்வரன்