பிரதானம் புதியவை

கருக்கிய உமி தயாரிப்பு மற்றும் பயன்கள்

கருக்கிய உமிக்கரியின் விஞ்ஞான வரலாறு

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தென் அமெரிக்காவின் அமேசன் நதி பள்ளத்தாக்கின் மழைக் காடுகளில் ஸ்பானிய ஆய்வாளர்கள் ஒரு விசித்திரமான விடயத்தை அவதானித்தனர். வழக்கமான வளமற்ற மழைக்காடு நிலங்களிற்கு பதிலாக, அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கறுப்பு நிற மண் ஆங்காங்கே தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. இது தொடர்பாக ஆராய்ந்த போது, இதன் அருகிலேயே வசிக்கும் பழங்குடி செவ்விந்தியர்களால் தாவரங்களை பகுதியளவில் எரித்து உருவாக்கப்பட்ட வளமான நிலத்துண்டங்கள் எனவும், பழங்குடியின மக்கள் தங்களது பயிர்களை தரிசு மண்ணில் வளர்க்க வேண்டிய தேவை ஏற்பட்ட போதே இதனைச் செய்துள்ளனர்.எனவும் தெரிய வந்தது. விவசாய கழிவுகளை பகுதியாக எரிப்பதன் மூலம் கரியை ஒத்த ஒரு பொருளை பெறுவது மட்டுமன்றி, அவற்றுடன் கலந்த கறுப்பு மண் தாவர வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது தொடர்பாகவும் கண்டறிந்தனர்.

1998 ஆம் ஆண்டில் அமெரிக்க மண் அறிவியல் சங்கத்தின் 215 வது தேசிய காங்கிரசில் முன்வைக்கப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில்,பழங்குடி மக்கள் உருவாக்கிய இக் கரியை பயோச்சார்” (BIOCHAR) என உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த நாட்டில் நாம் அதை உயிரியற் கரி என்று அழைக்கிறோம்.

 

கழிவாக அகற்றப்படும் தாவர பாகங்களான நெல் உமி, சோளக்கத்தை போன்றவற்றை இதற்காகப் பயன்படுத்தலாம் என்பதை விவசாய திணைக்கள பரிசோதனைகள் நிரூபித்துள்ளன.

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் எட்டு இலட்சம் மெட்ரிக் தொன் நெல் உமி உற்பத்தி செய்யப்பட்டாலும், கணிசமான அளவு இன்னும் வீணடிக்கப்படுகிறது. இதே போல் சோளப் பொத்தியும் ஆண்டிற்கு சுமார் நாற்பதாயிரம் மெட்ரிக் தொன் உற்பத்தி செய்யப்படுகின்றது.இருப்பினும் எவ்வித பயனுமில்லை.

 

உமிக் கரியைப் பயன்படுத்துவதிலுள்ள நன்மைகள்

தாவர வளர்ச்சிக்கு அவசியமான போசணைகளையும், நீரையும் தக்க வைத்துக்கொள்ளும் ஊடகமாக செயற்பட்டு போசணைகள் வீணாவதை தவிர்க்கின்றது.

உமிக் கரியில் சிலிக்கன் எனும் தாவரப் போசணையானது அதிகளவில் அடங்கியுள்ளது.சிலிக்கன் போசணையின் மூலம் தாவரத்தின் வலிமையை அதிகரிப்பதுடன், இதனால் நோய்கள், பீடைகளின் தாக்கங்களும் குறைக்கின்றது..

வேர் வளர்ச்சிக்கு அவசியமான மென்மையான தன்மையை மண்ணிற்கு வழங்குவதனால், நன்கு வளர்ச்சியடைந்த வேர்த் தொகுதியைக் கொண்டதாவரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

உமிக் கரியின் மூலம் மண்ணில் நீர் வடிந்து செல்வது மேம்படுத்தப்படும்.

உவர்த் தன்மை, இரும்பு நஞ்சாதலை தடுப்பதற்கு இது போன்ற பிரச்சினைகளைக் கொண்ட தோட்டங்களிற்கு இதனைப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது.

உமிக் கரியை தயாரித்தல்

இதற்கு 2 முறைகளைப் பயன்படுத்தலாம்.

 

-குந்தான் புகை போக்கி முறை

-குவியல் முறை

 

குந்தான் புகை போக்கியை செய்யும் முறை

உக்கலடையாத பீப்பாயை எடுத்து, ஒரு புகைபோக்கியை பீப்பாயின்  அடியில் துளையிட்டு பொருத்திக் (காய்ச்சி இணைத்தல்) கொள்ளுங்கள்.

பீப்பாயில் ஆங்காங்கே துளையிட்டு குந்தான் புகை போக்கியை அமைத்துக் கொள்ளுங்கள்.

உலர்ந்த விறகு, சிரட்டைகள் சிலவற்றை பயன்படுத்தி சிறியளவில் தீ மூட்டிக்கொள்ளவும்.

தீ நன்கு பற்றி எரியும் போது தீக் குவியலை மூடும் வகையில் குந்தான் புகை போக்கியை சில செங்கற் துண்டுகளின் மீது வைக்கவும்.

குந்தான் புகைப்போக்கியை மூடும் வகையில் உமியை குவிக்கவும்.

சாதாரணமாக 4 மணி நேரங்களின் பின்னர் உமிக் குவியலில் ஆங்காங்கே கறுப்பு நிறப் புள்ளிகளை காணலாம்.

அந்த இடங்களில் தீ வெளியேறுவதற்கு முன் உமிக் குவியலில் உள்ள எரியாத உமியினால் அதனை மூடி விடவும்.

அதற்காக சவல் அல்லது மண்வெட்டி போன்ற உபகரணங்களைப் பயனபடுததுவது முக்கியமாகும்

6 மணி நேரத்திற்குப் பின் கவனமாக மண்வெட்டியால் அல்லது ஏதாவது உபகரணத்தால் குந்தான் புகைப்போக்கியை சுற்றியுள்ள உமியை நீக்கி, குந்தான் புகைப்போக்கியை அகற்றவும்.

உமிக் குவியலின் நடுவில் மீதமாகவுள்ளவற்றை அகற்றி பாதி எரிந்த உமி மேலும் எரிவதை தடுப்பதற்கு நீரூற்றி தீயை அணைக்கவும்.

இச் சந்தர்ப்பத்தில் அனைத்து உமியும் கறுப்பு நிறத்திற்கு மாறி கரியாகக் காணப்படும்.

எந்த காரணத்திற்காகவும் சூடாக உள்ள பீப்பாயிற்கு நீர் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும்.

6 மணித்தியாலங்களின் பின் அனைத்து உமியும் கறுப்பு நிறத்தில் தென்படுவதைக் காணலாம்.

இச்சந்தர்ப்பத்தில் இன்னும் எரியாத உமி காணப்படுமாயின் அவற்றை மண்வெட்டியால் அல்லது சவலினால் நன்கு கலந்து விடவும்.

அதன் பின் நீரை ஊற்றி பாதி எரிந்த உமியானது மேலும் எரிவதைத் தடுக்கவும்.

நடைமுறை ரீதியாக உமிக் கரியைத் தயாரிக்கும் போது மாலை 5 மணியளவில் உமிக் குவியலிற்கு தீ மூட்டி பின் காலை 6 மணியளவில் உங்களால் உமிக்குவியலை இலகுவாக அணைத்துக் கொள்ள முடியும்.

250 கிலோ கிராம் உமிக் கரியை தயாரிப்பதற்கு 700 கிலோ கிராம் உலர்ந்த உமி தேவைப்படும்.

கிட்டத்தட்ட 50 கிலோ கிராம் யூரியா பையிற்குள் 10 கிலோ கிராம் உலர்ந்த உமியை நிரப்ப முடியும். அவ்வாறான 75 பைகளின் மூலம் தேவையான உமிக் கரியை தயாரித்துக் கொள்ள முடியும்.

மரக்கறிப் பயிர்களுக்கு உமிக் கரியை இடல் குழிகளை தயாரிக்கும் நேரத்தில் இரண்டு கையளவு உமிக் கரியை குழிகளுக்குள் இட்டு மண்ணுடன் கலந்து விடவும்.

 

Related posts

error: Alert: Content is protected !!